நான் அறிக்கை நாயகன்தான்.. நீங்கள் ஊழல் நாயகன்.. ஸ்டாலின் காட்டம்..
தனக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டம் அளித்த முதலமைச்சருக்கு ஊழல் நாயகன் என்ற பட்டத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை உள்பட பல்வேறு நிவாரணப் பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பின், அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர்.
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: விவசாயிகள் போராட்டத்துக்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளிக்கும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். திமுகவினர் நடத்தும் போராட்டங்களை அதிமுகவினர் தடுத்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டத்தை அளித்துள்ளார். அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால், எதிர்க்கட்சிகள் அரசியல்தான் செய்யும்.
ஆளும்கட்சியின் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டுவது தான் எதிர்க்கட்சிகளின் வேலை. நானும் அதைத்தான் செய்து வருகிறேன். எனக்கு பட்டம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நான், ஊழல் நாயகன் என்ற பட்டத்தை அளிக்கிறேன். சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து ஆராய கமிஷன் அமைத்திருக்கிறார்கள். தேர்தல் வருவதால் அரசியல் ஆதாயத்திற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.