விவசாயிகளின் நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது.. பிரதமர் மோடி பெருமிதம்..
விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 12 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளை(டிச.8) பாரத் பந்த் நடத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் மெட்ரோ நகர் திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி, காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
லக்னோவில் இதற்கான விழா நடைபெற்றது. அதில் மாநில கவர்னர் ஆனந்திப்பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொளியில் பிரதமர் மோடி பேசியதாவது:ஆக்ரா மெட்ரோ திட்டம் ரூ.8 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஆக்ரா பொலிவுறு நகரமாக மாறுவதற்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சகோதரர்கள், சகோதரிகள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாஜக அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை சமீபத்திய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. எங்கள் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் ஆதரவு, எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
இவ்வாறு மோடி பேசினார்.