பிளிப்ஸ் ஹீக்ஸ்க்கு நன்றி செலுத்திய மேத்யூ வடே!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் நடந்துவருகிறது. இதில் முதல் போட்டி கடந்த வெள்ளியன்று கேன்பராவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 161/7 ரன்களை குவித்தது. இரண்டாவதாக ஆடிய ஆஸ்திரேலியா அணி இருபது ஓவர் முடிவில் 150/7 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் வெற்றியைச் சுவைத்தது.
இந்நிலையில் இரண்டாவது இருபது ஓவர் போட்டியானது நேற்று (06-12-2020) சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. எனவே முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இருபது ஓவர் முடிவில் 194/5 ரன்களை விளாசியது. இந்த இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி இரண்டு பந்து மீதம் இருக்கையில் இலக்கை எட்டி போட்டியை வென்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
இந்த போட்டியில் நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று ரசிகர்களால், இணையத்தில் வரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி பந்து தாக்கியதால் உயிரிழந்த பிளிப்ஸ் ஹீக்ஸ்யை நினைவு கூறும் வகையில், ஆஸ்திரேலியா அணியின் இருபது ஓவர் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான மேத்யூ வடே தனது பேட்டில், இறந்த பிளிப்ஸ் ஹீக்ஸ்ன் கேப் எண்ணைப் பொறித்துள்ளார். இது ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிளிப்ஸ் ஹீக்ஸ் நியூ சவுத் வால்ஸ் அணிக்காகத் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் தனது 20 வயதில் ஆஸ்திரேலியா தேசிய அணிக்குத் தேர்வாகி தனது முதல் டெஸ்ட் போட்டியைத் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராகக் களமிறங்கினார். முதல் போட்டியின் முதல் ஓவரை வீசிய ஸ்டைன் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின்னர் இரண்டாவது போட்டியில் களமிறங்கிய இவர் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தார். இவர் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கும் போது இவருக்கு 408 என்ற எண் கொண்ட கேப் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் 25 நவம்பர் 2014 ல் சிட்னியில் நடந்த ஷெப்பீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியின் போது சீன் அபாட் வீசிய பவுன்சர் பந்து, தலையில் பலமாகத் தாக்கப்பட்டு நிலைகுலைந்தார். பின்னர் இவர் உடனே சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பந்து தாக்கியதில் முதுகெலும்பு மற்றும் மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளம் உடைந்ததால், மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, கோமாவிற்கு சென்றார். பின்னர் மூன்று நாட்கள் கழித்து அவர் மரணம் அடைந்தார். இவரின் மரணம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆணையம் மட்டும் அல்லாமல் உலக கிரிக்கெட் அரங்கையே அதிர வைத்தது. அதன்பின்னர் பேட்ஸ்மென்கள் அணியும் ஹெல்மெட்டில் பல மாறுதல்கள் கொண்டு வரப்பட்டது.