அவமானத்தை ஏற்படுத்தியுள்ளேன் மேல்முறையீடு செய்ய மாட்டேன் - ஸ்மித் உறுதி
கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளேன். தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். சீனியர் வீரர்களுடன் இணைந்து தான் பான்கிராப்ட் பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலியா பிரதமர் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து விசாரித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் இருவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதித்தது. மேலும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவர்கள் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கண்ணீர் மல்க பேசிய ஸ்மித், “அனைத்து அணி வீரர்களிடமும், உலகத்தின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும், இதனால், ஏமாற்றம் அடைந்துள்ள, கோபமடைந்துள்ள அனைத்து ஆஸ்திரேலிய மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஒரு அணியின் கேப்டனாக நான் அனைத்துக்கும் பொறுப்பேற்று கொள்கிறேன்.
மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை தற்போது உணர்ந்துவிட்டேன். என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது. இதனால் என் மனம் உடைந்துவிட்டது” என்று தெரிவித்தார். இதனையடுத்து, ஸ்மித்துக்கு விதிக்கப்பட்ட தடை அதிகம் என்றும் அவரை மன்னித்து விடலாம் என்று சச்சின் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரேக் டையர் கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் “தன் மீதான ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள ஸ்மித், “பந்தை சேதப்படுத்திய சம்பவம் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் நேசித்த கிரிக்கெட் விளையாட்டிற்கு நானே மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளேன். தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன். ஓராண்டிற்கு பிறகு என் நாட்டிற்காக மீண்டும் விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com