தமிழகத்தில் 27 ஆம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் : வெளி மாநில லாரிகள் நுழைய முடியாது
தமிழகத்தில் லாரிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த ஸ்டிரைக்கின் போது வெளி மாநில லாரிகள் ஒன்று கூட தமிழகத்திற்குள் நுழையாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், லாரிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டுக் கருவி தமிழகத்தில் மிக அதிக விலைக்கு விலைக்கு விற்கப்படுகிறது . குறிப்பாகக் கர்நாடக மாநிலத்தில் 1500 ரூபாய்க்கு விற்கும் கருவிகள் தமிழகத்தில் 8, 000 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒளிரும் ஸ்டிக்கர் மற்ற மாநிலங்களில் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 6000 ரூபாய் .
இது தவிர ஜிபிஎஸ் கருவி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஒளிரும் பட்டைகளை ஒரு சில குறிப்பிட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக அரசு எங்களைக் கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவாகும். எனவே கூடுதல் விலை குறித்தும் குறிப்பிட்ட சில நிறுவனங்களை வாங்க வேண்டும் என்பதைத் தளர்த்த வேண்டும் என்றும் பல முறை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரிடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 4 லட்சத்து 65 ஆயிரம் லாரிகளும் அன்று காலை முதல் இயங்காது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் இருந்தும் தமிழகத்திற்குள் லாரிகள் நுழையாது. என்றும், மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஜிபிஎஸ் கருவி போன்றவைகளை ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே தான் வாங்க வேண்டும் என அரசு கட்டாயப்படுத்தியதற்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கில், இந்த கருவிகளைத் தர நிர்ணயம் பெற்ற 49 நிறுவனங்களில் பெற்று கொள்ளாலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும், அதனை மதிக்காமல் , குறிப்பிட இரண்டு நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்.
எனவே, இதில் உள் நோக்கம் உள்ளது என்றும் இந்த கருவிகள் வாங்கச் சொல்வதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் தமிழக முதல்வர் விசாரணை நடத்திட முன் வர வேண்டும்.மற்ற மாநிலங்களில் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் வரி குறைக்கப்பட வில்லை என்றும், லாரிகளுக்கான காலாண்டு வரியை மற்ற மாநிலங்கள் ரத்து செய்துள்ளது.தமிழக அரசு மட்டும் வசூல் செய்து வருகிறது, இது போன்று லாரி உரிமையாளர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருவதால் தான், இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.