ஓசூரில் முதல்முறையாக மின்சார பயணிகள் ரயில் சேவை தொடங்கியது

பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மின்சார ரயில் இயக்குவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய மின்ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.கடந்த நவம்பர் மாதம் பணிகள் முடிவு பெற்று அதிகாரிகள் முறைப்படி அதில் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பெங்களூர் ஓசூர் வரை பயணிகள் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டது. காலை7:15 மணிக்கு பெங்களூர் இருந்து புறப்பட்ட ரயில் 8 :30 மணிக்கு ஓசூருக்கு வந்தது. மீண்டும் ஓசூரிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு 10:10க்கு பெங்களூர் சென்றடைந்தது.

16 பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயிலில் ஆயிரம் பேர் வரை பயணம் செய்யலாம். கடந்த 9 மாதங்களாக கொரானா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் சேவை ரயில் தற்போது தான் தொடங்கப்பட்டது. பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியிலிருந்து புறப்படும் மின்சார ரயில் பைப்பன அள்ளி, ஆனேக்கல் வழியாக ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. தற்போது இந்த சேவை காலை நேரம் மட்டும் இயக்கப்படும். பயணிகளின் வருகையை பொருத்து கால அட்டவணை மாற்றி அமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

More News >>