காவி மயமாக்கப்பட்டதா ஊட்டி மலை ரயில்... வைரல் புகைப்படங்களால் வந்த சர்ச்சை!

கொரானா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தளங்கள் மாநில மற்றும் மாவட்ட வருவாயைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத்தலங்கள்,பூங்காக்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ பாஸ் பெற்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த மலை ரயில் மட்டும் இன்னும் இயக்கப்படாமல் இருந்து வந்தது. பல்வேறு தரப்பினரும் இந்த ரயிலை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக ரயில் பெட்டிகள் பராமரிப்பு, தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து அக் டோபர் முதல் உதகை குன்னூர் இடையே மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்பி சு.வெங்கடேசன், ``உதகை மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு அதன் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 3000 ரூபாய். மார்ச் முதல் ஜூன், ஜூலையில் சீசன் காலத்தில் போய்வர ஒரு நபருக்கு 12000 வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே டார்ஜ்லிங் மலை ரயில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இந்தியா முழுக்க 150 ரயில்கள் தனியாருக்கு கொடுக்க அட்டவணை வெளியிடப்பட்டு, ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டன. இதில் தென்னக ரயில்வேயின் 26 ரயில்கள் அடக்கம். தாம்பரம் முதல் கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பத்தூர் ரயில்களும் அடங்கும். ஒரே நாளில் 485 ரூபாய் இருந்த கட்டணம் 3000 ரூபாயா? என்று அதிர்ச்சியடைய வேண்டாம். இதுவெல்லாம் அரசு திடீரென செய்யவில்லை. முறையாக அறிவித்து தான் செய்கிறது. தான்தோன்றித்தனமாக நடக்கும் பழக்கம் அரசுக்கு இல்லை. அது எல்லாவற்றையும் வெளிப்படையாகத்தான் செய்கிறது.

தனியார் நிறுவனம் மலைரயில் கட்டணத்தை 3000 ரூபாய் என நிச்சயித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக பலர் சொல்கின்றனர். இதைவிட குறைந்த கட்டணத்துக்கு மலைகளையே தனியாருக்கு கொடுத்துள்ளது அரசு. இப்பொழுது சொல்லுங்கள் தனியாரைவிட இளகியமனதோடு தானே அரசு நடந்து கொள்கிறது!" என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் காவி உடையணிந்து பெண்கள் ஊட்டி ரயிலில் இருப்பது போன்ற காட்சிகளும், ரயிலும் காவி நிறமாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் இதற்கு விளக்கம், அளித்துள்ள தெற்கு ரயில்வே, ``தனியார் நிறுவனம் ஒன்று மலை ரயிலை மொத்த வாடகைக்கு எடுத்து Chartered Trip சென்றது. மலை ரயில் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பணிப்பெண்கள் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் எல்லாம் பொய்" என விளக்கம் அளித்துள்ளது.

More News >>