எடையை குறைக்க உதவும் பழங்கள் எவை தெரியுமா?
உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு 'கார்போஹைடிரேட்' என்னும் மாவு பொருள் இருக்கும் உணவுகளை தவிர்க்கும்படி ஆலோசகர்கள் கூறுவார்கள். கார்போஹைடிரேட் உடல் எடை குறைவதற்கு பெரிய தடை. ஆனால் பழங்களை பொறுத்தமட்டில் அந்தவிதமான தடை பொருந்தாது. பழங்கள் ஆரோக்கியத்தை அளிப்பவை. அதிகமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டசத்து நிறைந்த பழங்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றை திருப்தியாக உணரச் செய்யும். அவற்றில் உள்ள ஃப்ரக்டோஸ், இனிப்பு சுவை தந்து நாவை திருப்திப்படுத்தும். எல்லா பழங்களுமே ஆரோக்கியத்துக்கு ஏற்றவைதாம். உடல் எடையை குறைத்தலை பொறுத்தமட்டில் சில பழங்கள் மற்றவற்றைக் காட்டிலும் சற்று சிறந்தவை. உடல் எடையை குறைய வேண்டும் என்று விரும்புவர்கள், முயற்சிப்பவர்கள் அவற்றை சாப்பிடலாம்.
பப்பாளிபப்பாளி பழத்தில் 'பாபெய்ன்' என்ற நொதி (என்சைம்) உள்ளது. அது வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) தூண்டுகிறது. அதன் காரணமாக வயிற்றில் உணவை சிதைக்க உதவுகிறது. பப்பாளி ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழம். அது தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கிறது. உடல் எடை குறையவும் உதவுகிறது. வைட்டமின் சி சத்து, ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்), ஃப்ளவனாய்டுகள் ஆகியவை பப்பாளி பழத்தில் நிறைந்துள்ளன. வயிற்று உப்பிசம், மலச்சிக்கல் ஆகியவற்றை குறைக்கும் பப்பாளி, நீரிழிவு பாதிப்புள்ளவர்களும் சாப்பிடக்கூடிய பழமாகும்.
ஆரஞ்சுஆரஞ்சு குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பழம். உடல் எடையை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக தவறாமல் சாப்பிடக்கூடிய பழம் இது. சிட்ரிக் வகை பழமான ஆரஞ்சு, வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்தது. இது குறைந்த எரிசக்தி (கலோரி) கொண்டது. ஒரு ஆரஞ்சு பழத்தில் 45 கலோரி மட்டுமே உண்டு. ஆகவே, உடலில் அதிக கலோரி சேரும் என்ற பயமில்லாமல் ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம்.
பெர்ரிஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி வகையை சேர்ந்த பழங்கள் ஊட்டச்த்து அதிகம் நிறைந்தவை. பல்வேறு வகை வைட்டமின்களும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகளும் நிறைந்தவை. இவற்றில் குறைந்த கலோரியே (எரிசக்தி) உண்டு. 150 கிராம் ஸ்ட்ராபெர்ரியில் 50 கலோரி ஆற்றல் மட்டுமே உண்டு. 150 கிராம் புளூபெர்ரி என்றால் 84 கலோரி இருக்கும். தானியங்கள் அல்லது யோகர்ட்டுடன் சேர்த்து காலை உணவாக சாப்பிடலாம்.
வாழைப்பழம்வாழைப்பழத்தில் கொழுப்பு சத்து உள்ளது என்பது பொதுவான நம்பிக்கை. மற்ற பழங்களைக் காட்டிலும் வாழைப்பழத்தில் கலோரி அதிகம். ஆனால், ஊட்டச்சத்துகளும் அதிகம் நிரம்பப் பெற்றது. பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் எண்ணற்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் இதில் நிரம்பியுள்ளன. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயத்தை குறைப்பதோடு, உடல் எடையை சீராக பராமரிக்க முடியும்.
ஆப்பிள்உடல் எடையைக் குறைக்கக்கூடிய பழம் ஆப்பிளாகும். ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதை சாப்பிடுவதற்கு நேரம் அதிகமாகும். அதிக கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் ஆப்பிள் உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆப்பிளை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் அவித்தும் சாப்பிடலாம்.