கேரளாவில் விறுவிறுப்புடன் தொடங்கிய முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்

கொரோனா பரவலுக்கு இடையே கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி சமூக அகலத்தைக் கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு வருகின்றனர்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் இன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் 10ம் தேதியும், மூன்றாவது கட்ட தேர்தல் 14ம் தேதியும் நடைபெறுகிறது.

இன்றைய முதல் கட்டத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 5 மாவட்டங்களில் உள்ள 395 உள்ளாட்சி அமைப்புகளில் 6910 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய தேர்தலில் மொத்தம் 88,26,871 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.

காலையிலேயே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி குடும்பத்துடன் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் போல அல்லாமல் இந்த தேர்தலில் மிகுந்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் தான் இதற்குக் காரணமாகும். வாக்காளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட முக கவசம் அணிந்து வந்தனர்.

சமூக அகலத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் வாக்காளர்கள் போதிய இடைவெளி விட்டு வரிசையில் நின்றனர். ஓட்டுப் போடுவதற்கு முன்பும், ஓட்டுப் போட்ட பின்னரும் வாக்காளர்களுக்கு கைகளைச் சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது.இம்முறை முதன் முதலாகச் சாதாரண வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 3 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களுக்குத் தபால் ஓட்டுப் போடலாம். இதன் பின்னர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் இன்று மணி 5 மணி முதல் 6 மணி வரை ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று ஓட்டுப் போடவேண்டும். தேர்தலை முன்னிட்டு 5 மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More News >>