முழு கடையடைப்பால் கிரிக்கெட் மைதானமானது பரபரப்பான தி.நகர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற முழு கடையடைப்பு போராட்டத்தை அடுத்து, சென்னை தி.நகர் உள்ளிட்ட பரபரப்பான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலம், உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தும், அதனை அலட்சியம் செய்த மோடி அரசின் நயவஞ்சகத்தை கண்டித்தும், காவிரி உரிமை மீட்கும் போராட்டத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையிலும் காலை 6 முதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய சிபிஐ, ஐபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாமக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் பங்கேற்றன.
மேலும், இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி, வியாழக்கிழமையன்று அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் சென்னை மாநகரம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சென்னையின் வர்த்தக மையமாக திகழும் தியாகராய நகர் பகுதியிலும் முழு கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. வழக்கமாக நள்ளிரவு வரை பரபரப்பாக காணப்படும் தி.நகர் சாலைகள் அமைதியாக இருந்தது. இதனால், இளைஞர்கள் அப்பகுதியில் கிரிக்கெட் மைதானம் போல் பேட்டும், பந்துமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com