முன்னாள் முதல்வருக்கு ஓட்டுப் போட அதிகாரிகள் அனுமதி மறுப்பு
70 வருடங்களாக ஏராளமான தேர்தல்களில் ஓட்டுப் போட்டு வந்த கேரள முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தனுக்கு இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. தற்போது உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வருவதால் தபால் ஓட்டுப் போட விண்ணப்பித்த போதிலும், அதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்தது தான் இதற்குக் காரணமாகும்.
கொரோனா பரவலுக்கு இடையே கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. மூன்று கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவனந்தபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இன்றும் (8ம் தேதி), எர்ணாகுளம் திருச்சூர் உள்பட 5 மாவட்டங்களில் வரும் 10ம் தேதியும், கண்ணூர், கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் மூன்றாவது கட்டமாக 14ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இன்று காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கேரளாவில் தற்போது கொரோனா நோய் பரவல் அதிக அளவில் இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே ஓட்டுப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் இவர் மட்டும் தான். 97 வயதாகும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக இருந்தார். இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இவர் பதவியில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இடது முன்னணி அமோக வெற்றி பெற்றது. அப்போதும் இவர் தான் முதல்வராக வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இவர் மலம்புழா தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். ஆனால் அவருக்குப் பதிலாக முதல்வராக பினராயி விஜயன் நியமிக்கப்பட்டார். தற்போது அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதுமை காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதால் வெளியில் எங்கும் செல்வது கிடையாது.
இதனால் தபால் ஓட்டுப் போட அனுமதி கேட்டுக் கடந்த சில நாட்களுக்கு முன் அச்சுதானந்தன் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதற்குத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்கள் மற்றும் தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டுப் போட அனுமதி அளிக்கப்படும் என்றும், மற்ற யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது. இதனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அச்சுதானந்தனால் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவரது மகன் அருண்குமார் கூறுகையில், எனது தந்தை கடந்த 1951 முதல் எல்லா தேர்தல்களிலும் ஓட்டுப் போட்டு வருகிறார். சொந்த ஊரான ஆலப்புழா அருகே உள்ள பரவூரில் தான் எனது தந்தைக்கு ஓட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வெளியே செல்லக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தான் தபால் ஓட்டுப் போட அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர் என்று கூறினார்.