வடபழனியில் கொள்ளையர்கள் அட்டூழியம்: பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டு நகைகள் திருட்டு
சென்னை வடபழனியில் பெண்ணை கட்டிப்போட்டு அடித்து கொலை செய்துவிட்டு கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருபவர் பாலா கணேஷ். இவர், சிவன் கோயிலில் குருக்களாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்கள், இன்று காலை வீட்டில் கட்டிப்போட்ட நிலையில் கிடந்துள்ளனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஆய்வு செய்ததில், பிரியா கை, கால்கள் கட்டிப்போட்ட நிலையில் இறந்துக்கிடந்தார். அவரது கணவர் பாலா கணேஷின் கை, கால்களும் கட்டிப்போட்டு கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இருவரையும் மீட்ட போலீசார் பிரியாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கும், பாலா கணேஷை சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளையர்கள் நகை, பணத்திற்காக இருவரையும் கட்டிப்போட்டை அடித்து உதைத்து பிரியா அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், கொள்ளையடித்துவிட்டு தப்பிய கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com