எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்குச் சுற்றுச்சூழல் துறையில் உரிய 0 அனுமதியைப் பெறவில்லை எனக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதித்திருந்தது.இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சேலம்-சென்னை நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வழக்கில் விசாரணை நடைபெற்று, கடந்த அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே இந்த வழக்கில் இன்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.அதில் சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தைத் தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் உரிய நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் திட்டத்திற்காக நிலத்தினை கையகப்படுத்தியது, பெயர் மாற்றம் செய்த முறைகள் தவறு என்றும், கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் நிலத்தின் உரிமையாளர்கள் பெயருக்கே மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்வதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் முன் அனுமதி உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் உரிய முறையில் பின்பற்றியே சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைத் தொடர வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.