நாட்டாமை நடிகர் கொரோனா தொற்றால் பாதிப்பு.. ஐதராபாத்தில் சிகிச்சை..
கோலிவுட்டில் கொரோனா பாதிப்புக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், நடிகைகள் தமன்னா. நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் போன்றவர்கள் உள்ளாகினர். அதே போல் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலியும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். ஏற்கனவே பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் போன்றவர்களும், அமீர்கான் தாயார், போனிபூர் மற்றும் சல்மான் கான் வீட்டுப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனால் சல்மான் கான், போனி கபூர் தனிமைப்படுத்திக் கொண்டதுடன் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டனர். நடிகர் சஞ்சய்தத்துக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று தெரிந்தது. ஆனால் நுரையீரலில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. மும்பை மருத்துவமனையில் சேர்ந்து அதற்கான சிகிச்சை பெற்று மீண்டார்.
கோலிவிட்டில் தற்போது நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டாமை, சூரியன் என ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சரத்குமார் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.சரத்குமார் தற்போது ஐதராபாத்தில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா கூறும்போது, ஐதராபாத்தில் சரத்குமாருக்கு இன்று பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிறந்த டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து அடிக்கடி ரசிகர்களுக்கு அப்டேட் செய்யப்படும் என்றார்.அதே போல் சரத்குமார் மகள் வரலட்சுமி கூறும்போது, அப்பாவுக்கு கொரோனா பாசிடிவ் என்று தெரிந்தது. அவர் தற்போது ஐதராபாத்தில் நல்ல டாக்டர்களின் சிகிச்சையில் உள்ளார். குணம் அடைந்து வருகிறார் என்றார்.சரத்குமார் சினிமாவில் கவனத்தை குறைத்துக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி அதன் தலைவராகவும் உள்ளார்.