இப்படியும் நடக்கும்..... தலைமை தேர்தல் அதிகாரிக்கு கூட ஓட்டு இல்லை

கேரளாவில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் டீக்காராம் மீனாவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது தான் இதற்குக் காரணமாகும்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பரவலுக்கு இடையேயும் முதல் கட்ட தேர்தல் இன்று மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2வது கட்ட தேர்தல் வரும் 10ம் தேதியும், 3வது கட்ட தேர்தல் 14ம் தேதியும் நடைபெறுகிறது. எத்தனை முறை தேர்தலில் ஓட்டுப் போட்டாலும் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்படும் என்பதற்குக் கேரளாவில் இன்று நடந்த ஒரு சம்பவமே உதாரணமாகும். கடந்த வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போட்ட கேரள தலைமைத் தேர்தல் ஆணையாளருக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கேரள தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவர் டீக்காராம் மீனா. இவருக்குத் திருவனந்தபுரம் பூஜப்புரா என்ற இடத்தில் ஓட்டு உள்ளது. கடந்த பல தேர்தல்களில் இங்குள்ள வாக்குப் பதிவு மையத்தில் தான் இவர் ஓட்டுப் போட்டு வந்தார். கடந்த வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இவர் வழக்கம் போல பூஜப்புராவிலுள்ள பள்ளியில் ஓட்டுப் போட்டார். இந்நிலையில் நேற்று வாக்காளர் பட்டியலைப் பரிசோதித்த போது அவரது பெயர் இல்லை. இது குறித்து அவர் உடனடியாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டருக்கு போன் செய்து விவரத்தைக் கூறினார். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று திருவனந்தபுரம் கலெக்டர் கூறினார்.

இதையடுத்து இன்றைய தேர்தலில் கேரள தலைமைத் தேர்தல் ஆணையர் டீக்காராம் மீனாவால் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போட்டதால் உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் இருக்கும் எனக் கருதினேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. இதற்காக நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார்.

More News >>