சில்க் ஸ்மிதா வேடம் ஏற்கும் நடிகை யார் தெரியுமா?
1980, 90களில் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவுக்குப் படத்துக்குப் படம் அவர் கவர்ச்சி நடனம் இருக்கும். சில்க் ஸ்மிதா இருந்தால் தான் பட பிஸ்னஸ் ஆகும் என்ற நிலையும் இருந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு என 80. 90களின் ஹீரோக்களுடன் அவர் நடித்தார். சினிமாவில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மகிழ்வித்த சில்க் ஸ்மிதாவின் நிஜவாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை. அவரை சிலர் காதலிப்பதாக கூறி ஏமாற்றினர்.
சில்க் ஸ்மிதா இறந்து 20 ஆண்டுகள் கடந்தும் அவரது மோகம் இன்னும் முற்றிலுமாக தீரவில்லை. விஜய லட்சுமி வட்லபட்லா என்ற ஸ்மிதா 1979ம் ஆண்டு வண்டிச்சக்கரம் திரைப் படத்தில் சில்க் என்ற பாத்திரத்தில் புகழ் பெற்றார். பின்னாளில் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 450 திரைப் படங்களில் நடித்தார். 1996 இல் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.
ஸ்மிதாவின் வாழ்க்கை கதையாக இந்தியில் டர்ட்டி பிக்சர் என்ற படம் உருவானது 2011ல் தயாரான இப்படத்தில் வித்யா பாலன் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்தார். அப்படம் அவருக்குத் தேசிய விருது பெற்றுத்தந்தது. ஆனால் இந்த படம் சில்க் ஸ்மிதாவை மட்டுமல்ல, மேலும் பல நடிகைகளையும் அடிப்படையாகக் கொண்டது என்று சில தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டனர். மறைந்த நடிகர் வினு சக்ரவர்த்தி சில்க் ஸ்மிதாவைப் பற்றி ஒரு சுயசரிதை தயாரிக்க திட்டமிட்டிருந்தாலும், அவர் இறப்பதற்கு முன்பு அது செயல்பாட்டுக்கு வரவில்லை.சமீபத்தில், சில்க் ஸ்மிதா குறித்த வாழ்க்கை வரலாறு படம் தமிழில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு சமீபத்தில் வந்தது. ஆனால் சில்க் வேடத்தில் யார் நடிப்பது பற்றி அறிவிக்கப்படாமலிருந்தது.
தெலுங்கில் சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை வேடத்திற்கான விருதை வென்றவர் பிரபல தொலைக் காட்சி தொகுப்பாளரான அனுசுயா பரத்வாஜ். இவர் தான் சில்க் ஸ்மிதாவாக நடிக்க உள்ளாராம்.இது பற்றி உறுதிப்படுத்திய அனுசுயா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “மற்றொரு நல்ல கதையின் மூலம் வாழ உள்ளேன். புதிய ஆரம்பம் தமிழில் எண்ட்ரி ஆகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.