ஊட்டி மலை ரயில் விவகாரம்... கமல் கண்டனம்!

கொரோனா ஊரடங்குக்கு பிறகு அக்டோபர் முதல் உதகை குன்னூர் இடையே மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்பி சு.வெங்கடேசன், ``உதகை மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு அதன் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 3000 ரூபாய். மார்ச் முதல் ஜூன், ஜூலையில் சீசன் காலத்தில் போய்வர ஒரு நபருக்கு 12000 வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது" என்று குற்றம் சுமத்தி இருந்தார்.

மேலும் காவி உடையணிந்து பெண்கள் ஊட்டி ரயிலில் இருப்பது போன்ற காட்சிகளும், ரயிலும் காவி நிறமாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் இதற்கு விளக்கம், அளித்துள்ள தெற்கு ரயில்வே, தனியார் நிறுவனம் ஒன்று மலை ரயிலை மொத்த வாடகைக்கு எடுத்து Chartered Trip சென்றது. மலை ரயில் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பணிப்பெண்கள் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் எல்லாம் பொய்" எனக் கூறி இருந்தது.

இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இது தொடர்பாக, பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.

More News >>