பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லை சித்ரா தற்கொலை.. சின்னத்திரையுலகம் அதிர்ச்சி..
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை சித்ரா இன்று அதிகாலையில் தூக்கில் தொங்கினார். விஜய் டி.வி.யில் 2018-ம் ஆண்டு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார். பெண்கள் மத்தியில் இந்த தொடர் மிகவும் பிரபலம் என்பதால், முல்லை சித்ராவுக்கு ரசிகைகள் அதிகமாக இருந்தனர்.
இந்நிலையில், சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நசேரத்பேட்டையில் இருக்கும் தனியார் விடுதியில் சித்ரா நேற்றிரவு தங்கியிருக்கிறார். இன்று அதிகாலையில் சித்ரா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி காட்டுத் தீயாகப் பரவி, சின்னதிரை பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். 'சரவணன் மீனாட்சி (சீசன் 2)' தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் நடித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்குத் தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு காலம் முடிந்த பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர். இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.