விவசாயிகளின் போராட்டம் 14வது நாளாக தொடர்கிறது.. அமித்ஷா பேச்சு தோல்வி..
விவசாயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், இன்றைய(டிச.9) பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 14வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் வாகனங்களுடன் முகாமிட்டுள்ளதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் அழைப்பின் பேரில் நேற்று (டிச.8) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பல மாநிலங்களில் பஸ், ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.இதற்கிடையே, விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. இதனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றிரவு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் 14 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயச் சங்கத்தினர், மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு என்று பிடிவாதமாகக் கூறி விட்டனர்.
இதைத் தொடர்ந்து, அந்த சட்டங்களில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப திருத்தங்கள் கொண்டு வருவதாகவும், அதற்கான வரைவு திட்டத்தை வேளாண் அமைச்சர் தோமர், விவசாயச் சங்கத்தினரிடம் அளிப்பார் என்றும் அமித்ஷா தெரிவித்தார். அந்த திட்டத்தை விவசாயிகள் பரிசீலித்து முடிவெடுக்குமாறு கூறினார்.இது பற்றி, பாரதீய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் தியாகயத் கூறுகையில், இன்று(டிச.9) பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பில்லை. மத்திய அரசின் திட்டத்தை அமைச்சர் தோமர் இன்று அளிப்பார். அது பற்றி விவசாயிகளிடம் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ஹன்னன் மொல்லா கூறுகையில், இன்று பகல் 12 மணியளவில் சிங்கு எல்லையில் விவசாயிகளிடம் மத்திய அரசின் திட்டம் குறித்து விவாதிக்கப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார்.இதற்கிடையே, விவசாயிகள் பிரச்சனைக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு, ஜனாதிபதியை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறது. ராகுல்காந்தி, சரத்பவார் உள்ளிட்ட ஐந்தாறு பேர் மட்டும் ஜனாதிபதியைச் சந்தித்து, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்க உள்ளனர்.