அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணி டிச.15ல் தொடக்கம்..
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணி வரும் 15ம் தேதி தொடங்கப்படுகிறது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒப்படைக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இதன்பின், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். ராமர் பிறந்த பூமியாகக் கருதப்படும் இடத்தில் கோயில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டாலும், கொரோனா காரணமாக பணிகள் தாமதமாகி வந்தது.
இந்நிலையில், ராமஜென்மபூமி அறக்கட்டளையின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அறக்கட்டளையின் தலைவர் நிபேந்திர மிஸ்ரா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான தொழில்நுட்பக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கோயில் அஸ்திவாரம் அமைக்க மொத்தம் 1200 தூண்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான தொழில்நுட்ப ஆய்வுகளை எல் அன்ட் டி நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி, ரூர்கியில் உள்ள மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் போன்றவை அளித்துள்ளன.
இந்நிலையில், கோயிலுக்கான அஸ்திவாரப் பணி வரும் 15ம் தேதிப் பிறகு தொடங்கப்படும் என்று அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் தெரிவித்தார். மொத்தம் 65 ஏக்கர் நிலத்தில் கோயில் வளாகம் கட்டப்படுகிறது. முதலில் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.