பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையும் திண்டாட்டத்தில் இருந்தது, ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது வசந்த காலமாக மாறியது. பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும், தமிழக அரசு தேர்விற்குப் பதிவு செய்த அனைத்து மாணவர்களின் அரியர் தேர்வையும் எழுதாமலேயே தேர்ச்சி என அறிவித்தது.
ஆனால் இந்த அறிவிப்பின் சுவையை அனுபவிப்பதற்குள், யூஜிசி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அரியர் தேர்வைக் கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் தமிழக தொழில்நுட்ப கழக ஆணையத்தின் சார்பில் இந்த அக்டோபர்/ நவம்பர் காலத்திற்கான பருவத்தேர்வு சம்பந்தமாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2003 ம் ஆண்டில் இருந்து படித்த மாணவர்கள், அவர்களின் அரியர் தேர்வுகளைப் பதிவு செய்து எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பருவத்தேர்வும் இணையத்தின் மூலம் நடைபெறும் என்பதால் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் கால அளவு முடிந்த மாணவர்களுக்குக் கருணை அடிப்படையில் வாய்ப்பு வழங்குவது வாடிக்கையான ஒன்று என்றாலும், இந்த முறை கல்லூரிக்கு வராமல், வீட்டிலிருந்த படியே இணைய வழியில் தேர்வு எழுதலாம் என்பது மாணவர்களுக்குக் குதுகலத்தை அளித்துள்ளது. இவ்வாறு கருணை அடிப்படையில் எழுதும் மாணவர்கள் ஒரு பாடத்திட்டத்திற்கு தலா ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் மதிப்பெண் சான்றுக்கு ரூ.40 மற்றும் பதிவு கட்டணம் ரூ.30 செலுத்த வேண்டும்.
கடந்த கல்வியாண்டில் முடித்த மாணவர்கள் ஏப்ரல் மாதம் நடந்த பருவத்தேர்வில் அரியர் தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை. எனவே அவர்கள் இந்த பருவத்திற்குப் பதிவு கட்டணம் மற்றும் மதிப்பெண் சான்று கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். கடந்த முறை தேர்வு எழுதாதவர்கள், இம்முறை தேர்வெழுதக் கல்லூரிக்குச் சென்று பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எழுதும் அரியர் மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.65 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/Fee.pdf