காலையில் கதவைத் திறந்தால் வாசற்படியில் முதலை.. அப்புறம் நடந்தது என்ன?
அதிகாலை 5 மணியளவில் வீட்டுக் கதவை திறந்தபோது வாசற்படியில் வாயைத் திறந்தபடி ஒரு முதலை...... காலையிலேயே இந்த பயங்கர காட்சியை பார்த்தவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஊர் மக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அந்த முதலை ஆற்றில் விடப்பட்டது. கேரள மாநிலம் ஆதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே இந்த சம்பவம் இன்று நடந்தது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது ஆதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது உண்டு. ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சியும், அடர்ந்த வனப்பகுதியும் உள்ள இந்த இடம் சினிமாக்காரர்களுக்கு மிகவும் பிடித்தமான ஷூட்டிங் ஸ்பாட் ஆகும்.
பெரும்பாலான மணிரத்தினத்தின் படங்கள் இந்த நீர் வீழ்ச்சியிலும், இங்குள்ள வனப்பகுதியிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. ராவணன், ரோஜா புன்னகை மன்னன் உட்பட ஏராளமான தமிழ் படங்கள் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குளிக்கின்ற போதிலும் யாருக்கும் இதுவரை முதலையால் எந்த ஆபத்தும் ஏற்பட்டதில்லை. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகே ஒரு சில வீடுகளும் உள்ளன. சுமார் 100 மீட்டர் தொலைவில் சாஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சோபியா என்ற மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று இரவு வழக்கம் போல் இவர்கள் தூங்கச் சென்றனர்.
அதிகாலையில் வீட்டின் முன் இருந்த நாற்காலிகள் கீழே விழும் சத்தம் கேட்டது. அடிக்கடி நாய் மற்றும் குரங்குகள் அங்கு வருவதுண்டு. எனவே அவை தான் நாற்காலிகளை உருட்டுகிறது என சாஜன் கருதினார். இன்று அதிகாலை 5 மணியளவில் சாஜனின் மனைவி சோபியா வழக்கம் போல எழுந்து வீட்டுக் கதவை திறந்தார். அப்போது வாசற்படி முன் வாயை பிளந்தபடி ஒரு பெரிய முதலை படுத்துக் கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சோபியா, கதவைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் ஓடினார். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சாஜனிடம் வீட்டு முன் முதலை படுத்துக் கிடக்கும் விவரத்தை சோபியா கூறினார். சாஜன் வந்து பார்த்த போது அவரும் அதிர்ச்சியடைந்தார். ஒரு கம்பை எடுத்து முதலையை விரட்ட அவர் முயற்சித்தார்.
ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. அது எங்கும் செல்லாமல் வீட்டு முன் இருந்த நாற்காலிகளுக்கு அடியில் படுத்துக் கொண்டது. இதுகுறித்து சாஜன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினரும், அப்பகுதியினரும் சேர்ந்து பல மணி நேரம் போராடி முதலையை கயிற்றால் கட்டி ஆற்றில் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக சாஜனின் குழந்தை வீட்டு முன்பு தான் விளையாடுவது வழக்கம். காலையிலேயே முதலையை பிடிக்க முடிந்ததால் தான் தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்று சாஜன் கூறினார்.