தர்மயுத்தத்தால் கிடைத்த விளைச்சல் கண்ணை மறைத்துவிட்டதா? - துரைமுருகன் கேள்வி
காவிரி நடுவர் மன்றம் திமுக ஆட்சியின் சாதனையே தவிர அதிமுகவின் சாதனை இல்லை என்பது தெரியவில்லையா அல்லது தர்மயுத்தத்தால் கிடைத்த விளைச்சல் கண்ணை மறைத்துவிட்டதா? என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கழக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் தமிழகத்திற்கு மறக்கவும், மன்னிக்கவும் முடியாத அடுக்கடுக்கான பல துரோகங்களை அடுத்தடுத்து செய்துவிட்டு, இன்றைக்கு விவசாயிகளை வேதனைத் தீயில், அதிமுக அரசு தள்ளி விட்டுள்ளது.
ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “அரசின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளராக” இருந்து கொண்டு, “மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கவும், ஆட்சியைக் கலைக்கவும் காவிரிப் போராட்டத்தில் அரசியல் செய்கிறார்”, என்ற நகைச்சுவையான குற்றச்சாட்டை நாகூசாமல் முன்வைத்து, தமிழகம் முழுவதும் காவிரிக்காக வெற்றிகரமாக நடைபெற்ற தன்னெழுச்சியான முழு அடைப்புப் போராட்டத்தையும், சாலை மறியல்களையும் கேலி செய்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் ஜனநாயகரீதியிலான அறப்போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து, “தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்படும், பொறுமையாக இருக்க வேண்டும்”, என்று உச்சநீதிமன்றத்தின் மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களே கூறியிருக்கின்ற நிலையில், அதிமுக அமைச்சரும், துணை முதலமைச்சரும், முதலமைச்சரும் தமிழ்நாட்டில் நடக்கும் காவிரிப் போராட்டங்களை தங்களின் சுயநலனுக்காகவும், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் திரித்தும், பழித்தும் பேசிவருவது தமிழகத்திற்கு செய்யும் முதல் துரோகம்.
அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமல்ல, நேற்றைய முன்தினம் (3.4.2018) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னறிவிப்பின்றி கலந்து கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “1974ல் காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறிவிட்டது தி.மு.க”, என்று தொடர்ந்து கர்நாடக மாநிலம் எடுத்துவைத்து வரும் அதே வாதத்தை கூறியிருக்கிறார்.
1924 காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1974ல் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் அல்ல என்பதை தவறாமல் நினைவில் கொள்ளவேண்டும். இந்த வாதத்தை கர்நாடக மாநிலம் மட்டுமே திரும்பத் திரும்ப எடுத்துவைத்து வருகிறது. தமிழ்நாட்டில் அதே கருத்தை கர்நாடகத்தின் ஊதுகுழல் போல அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது.
காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பிலேயே “1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் இப்போதும் செல்லும். அந்த ஒப்பந்தம் 1974-ல் காலாவதியாகி விட்டது என்ற கர்நாடக அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது”, என்று தெளிவுபடுத்தி விட்டுத்தான் காவிரி இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதை அதிமுகவின் அமைச்சர்கள் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், காவிரி நடுவர்மன்றத் தலைவராக இருந்து அளித்த தீர்ப்பை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படித்துப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் யாருடைய சுயலாபத்திற்காக அதை மாற்றித் திரித்துப் பேசத்துடிக்கிறார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
முதலமைச்சர், மத்தியில் உள்ள பா.ஜ.க.விற்கு மட்டுமல்ல, கர்நாடகவில் உள்ள பா.ஜ.க.விற்காகவும் இதுபோன்ற சொத்தையான வாதத்தை முன்வைத்துப் பேசி, அவர்களுக்கு நேரடியாகவே உதவிட முடிவு செய்திருப்பது, தமிழகத்திற்கு இழைக்கும் பெரிய அநீதி.
எனவே, கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளாமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து, கழகத்தின் மீது குறைசொல்லி, பொய்களை எடுத்துப் பேசியிருப்பது முதலமைச்சர் பதவிக்குத் தகுதி உடையதுதானா என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆகவே, காவிரி நடுவர் மன்றம் தி.மு.க. ஆட்சியின் சாதனையே தவிர அதிமுகவின் சாதனை இல்லை என்பதை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியவில்லை என்பது வேதனையளிக்கிறது.
ஒருவேளை, தெரியவில்லையா அல்லது தெரிந்திருந்தும் பேசும் துணிச்சலில்லையா? தர்மயுத்தத்தால் கிடைத்த விளைச்சல் கண்ணை மறைத்துவிட்டதா? எல்லாவற்றுக்கும் மேலாக காவிரி விவகாரங்களை கவனிக்கும் பொதுப்பணித்துறை இப்போது முதலமைச்சரிடம் இருக்கிறது. ஏற்கனவே இந்தத் துறையை துணை முதலமைச்சர் கவனித்திருக்கிறார்.
மக்களின் ஜனநாயக ரீதியான காவிரிப் போராட்டத்தின் முனையை மழுங்க வைத்து திசைதிருப்ப, ஏதாவது ஒருவகையில் திமுக மீது வீண்பழி சுமத்தி, மத்திய பாஜக அரசுக்கும், கர்நாடக பா.ஜ.க.விற்கும் எந்தவகையில் உதவுவது என்று நீண்ட ஆலோசனை செய்து, சுயநல அடிப்படையில் உருவாக்கப்பட்ட சதித்திட்டம் மட்டும் இருவரின் பேச்சுகளில் எதிரொலிக்கிறது. இதுவே, அமைச்சர் ஜெயக்குமாரின் கைவந்த கலையான புழுதி வாரித்தூற்றுதலிலும் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com