17வது வயதில் இந்திய அணியில் இடம் பெற்ற வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
17வது வயதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று மிக இளம் வயது விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த பார்த்திவ் படேல் தன்னுடைய 35வது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் கடந்த 2002 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போது இவரது வயது 17 வருடங்களும், 153 நாட்களும் ஆகும். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த மிக இளம் வயது விக்கெட் கீப்பர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.
சச்சின் டெண்டுல்கர், பியுஷ் சாவ்லா, எல். சிவராமகிருஷ்ணன் ஆகியோருடன் இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடிய மிக இளம் வயது வீரர் என்ற பெருமை இவருக்கும் உண்டு. இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பார்த்திவ் படேல், 31.1 3 சராசரியில் 934 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக டெஸ்ட் போட்டியில் இவர் 71 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டியில் 62 கேட்சுகளும், 10 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர், 23.74 சராசரியில் 736 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக ஒருநாள் போட்டியில் இவர் எடுத்த ரன்கள் 95 ஆகும். இது தவிர 30 கேட்சுகளும், 9 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். இரண்டே இரண்டு டி20 போட்டியில் மட்டுமே இவர் விளையாடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்கா அணியுடன் இவர் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 2003ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், 2012ல் பிரிஸ்பேனில் இலங்கைக்கு எதிராகக் கடைசி போட்டி ஆடினார். சர்வதேச போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடினாலும் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்திய அணியில் இருந்ததால் இவருக்குப் பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. தோனி ஓய்வு எடுக்கும் போது மட்டுமே பார்த்திவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. வழக்கமாக பெரும்பாலான வீரர்களுக்கு ரஞ்சி டிராபியில் விளையாடிய பின்னர் தான் தேசிய அணியில் இடம் கிடைக்கும்.
ஆனால் இந்திய அணியில் இடம் பெற்ற பின்னர் தான் பார்த்திவ் படேல் ரஞ்சிப் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். 2002ல் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். தேசிய அணியில் மட்டுமில்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் இவர் சிறப்பாக விளையாடினார். ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான், மும்பை மற்றும் சென்னை அணியில் இவரும் இடம்பெற்றிருந்தார். இந்த 3 அணிகள் தவிர ஐதராபாத், கொச்சி மற்றும் டெக்கான் சார்ஜஸ் ஆகிய அணியிலும் பார்த்திவ் படேல் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பார்த்திவ் படேல் இன்று அறிவித்துள்ளார்.