இறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருக்கிறார்கள்: திமுக எம்எல்ஏ புகார்

உரியப் படிவம் வழங்கியும் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் ஆயிரக்கணக்கான பெயர்களை நீக்கப்படவில்லை எனச் சேலம் ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏ. புகார் செய்துள்ளார்.சேலம் மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட சேலம் தெற்கு தொகுதி, சேலம் மேற்கு தொகுதி, சேலம் வடக்கு தொகுதி, மற்றும் ஓமலூர் சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் 13 ஆயிரத்து 608 பேரின் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்றும் , 2,066 பேரின் பெயர்கள் இரு முறை பதிவாகி உள்ளதாகவும் மற்றும் இடம் பெயர்ந்த 6,562 நபர்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் உரிய ஆதாரங்களுடன் இன்று சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் ஆட்சியர் ராமனைச் சந்தித்து புகார் அளித்தார்.

தொடர்ந்து ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இறந்தவர்களின் பெயரை நீக்கக் கோரி, நீக்கல் படிவம் எண் 7 ஐ வழங்கியதோடு, பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறியும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர் நீக்கப்படவில்லை. அதேபோல் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் இருமுறைப் பெயர் பதிவான வாக்காளர்கள் 2066 பேர் உள்ளனர், அதனைச் சரி செய்ய வேண்டும். இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களையும் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும், இல்லையேல் ஒரு தொகுதிக்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள், ஆளும் கட்சியினருக்குச் சாதகமான வாக்குகளாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக இந்த குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என போதிய ஆதாரங்களுடன் கலெக்டரிடம் மனு செய்துள்ளேன் என்றார்.

More News >>