இந்து, கிறிஸ்தவ இளம்பெண்களை சீனாவுக்கு விபச்சாரத்திற்கு அனுப்பும் பாகிஸ்தான் பரபரப்பு தகவல்கள்
பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தவர்கள் ஆன இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களைக் கட்டாயப்படுத்தியும், பண ஆசை காட்டியும் சீனாவுக்கு அனுப்பி அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகப் பாகிஸ்தான் மீது சர்வதேச மத சுதந்திர அமைப்பு பரபரப்பு புகார் கூறியுள்ளது.பாகிஸ்தானில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களான இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் மோசமான கொடுமைகளுக்கு ஆளாவதாக நீண்டகாலமாகப் புகார் கூறப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த இளம் பெண்களைக் கட்டாயப்படுத்திக் கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்யும் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. காலம் காலமாகப் பாகிஸ்தான் மீது இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டு வருகின்ற போதிலும் பாகிஸ்தான் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இதை விடக் கொடுமையான மேலும் ஒரு சம்பவத்தைச் சர்வதேச மத சுதந்திர அமைப்பு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களைக் குறிவைத்து அவர்களைச் சீனாவுக்கு அனுப்பி வைத்து அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்குக் கட்டாய திருமணம் செய்து வைத்து பின்னர் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக இந்த அமைப்பு பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச மத சுதந்திர அமைப்பின் அமெரிக்கத் தூதரான சாமுவேல் டி பிரவுன்பேக் கூறியது: சீன நாட்டைச் சேர்ந்த ஆண்களுக்குக் கட்டாய திருமணம் செய்து வைப்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர். இவர்களது பெற்றோர்களுக்குப் பண ஆசை காட்டியும், மிரட்டியும் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இவர்களுக்குப் பாகிஸ்தான் சமூகத்தில் போதுமான ஆதரவு எதுவும் கிடைப்பதில்லை. இதனால் தான் இது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியே வராமல் போகிறது. கடந்த வருடம் ஒரு சர்வதேச செய்தி நிறுவனம் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்ட 629 இளம்பெண்களைக் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.
இவ்வாறு சீனாவுக்கு அனுப்பப்படும் இளம்பெண்களை அங்குள்ளவர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர். சிறிது காலம் அவர்களுக்கு மனைவிகளாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இந்துப் பெண்களை விட ஏழ்மை நிலையில் உள்ள கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்களைத் தான் இந்த கடத்தல் கும்பல்கள் அதிகமாகக் குறி வைக்கின்றன. அரசு அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. இதனால் பாகிஸ்தானில் இதுபோன்ற குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.