ஃபேஸ்புக்கில் 5.62 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருட்டு - நிறுவனம் ஒப்புதல்
தகவல் திருட்டு விவகாரத்தால் இந்தியாவில் 5.62 லட்சம் முகநூல் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை பிரிட்டனைச் சேர்ந்த 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' என்ற நிறுவனம் மேற்கொண்டது. அப்போது லட்சக்கணக்கான முகநூல் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் வாயிலாக அவர்களது விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு அதை டிரம்ப்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இது இந்தியாவிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே விவாதங்கள் ஏற்பட்டது. இந்தியத் தேர்தலிலும் இந்த உத்தி கையாளப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவைப்பட்டால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்பவும் முடியும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் முகநூல் நிறுவனத்துக்கு அறிவிக்கை ஒன்றை அண்மையில் அனுப்பியது. பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைளில் அந்நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது? தகவல் திருட்டு விவகாரங்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை? என்பன குறித்த விவரங்களை அளிக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், இந்தியாவில் தேர்தல் நடைபெற்றபோது இங்குள்ள பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறாகக் கையாளப்பட்டனவா? என்பது குறித்தும் மத்திய அரசு முகநூல் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து முகநூல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “உலக அளவில் மொத்தம் 8.7 கோடி பேரின் முகநூல் விவரங்கள் தவறாகக் கையாளப்பட்டிருக்கின்றன. அவற்றில் அதிகமாக பாதிக்கப்பட்டது அமெரிக்கர்கள்தான்.
இந்தியாவைப் பொருத்தவரை தகவல் திருட்டால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 335 மட்டுமே. அதேவேளையில் 5.62 லட்சம் பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான துல்லியமான விவரங்களை அறிவதற்காக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com