தாங்க முடியாத குளிர்... 10 நாள் தொடர் போராட்டம்.. டெல்லியில் மாண்ட விவசாயி
டெல்லி நிலவி வரும் குளிர் காலநிலை விவசாயிகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் உயிரிழந்து வருகின்றனர். போராட்டத்தின் ஏழாம் நாளான புதன்கிழமை இரு விவசாயிகள் இறந்தனர். எட்டாம் நாளான வியாழக்கிழமை 4 விவசாயிகள் இறந்தனர். இப்படி இறப்புகள் அதிகரித்து வருவது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, டெல்லி - ஹரியானா எல்லையான ஷிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஹரியானாவைச் சேர்ந்த அஜய் மோரே என்ற 32 வயது விவசாயி நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதிதான் இவரது பூர்விகம். அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர். டெல்லி நிலவி வரும் கடும் குளிர் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜய் டெல்லி - ஹரியானா எல்லையான ஷிங்கு பகுதியில் கடந்த 10 நாள்களாக போராட்டத்தில் பங்குபெற்று வந்தார். அவரின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.