சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்தி நடிகர் சல்மான் கான் அரியவகை வெளிமானை சட்டவிரோதமாக வேட்டையாடியது தொடர்பான வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு ‘ஹம் சாத் சாத் ஹேன்’ என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பின்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் அரியவகையான மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான், நடிகைகள் தபு, சொனாலி பிண்ட்ரே உள்ளிட்ட சிலர் மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.முன்னதாக இதே மான் வேட்டை வழக்கில் மேலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சல்மான் கான் உட்பட 7 பேருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஒரு வாரக் காலம் சிறையில் இருந்த சல்மான் கானை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்நிலையில், 20 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், இருதரப்பு வாதங்கள், மார்ச், 28ம் தேதியுடன் முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி, சல்மான் உள்ளிட்ட நடிகர் - நடிகையர், நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மாஜிஸ்திரேட், தேவ் குமார் கத்ரி, 'மான் வேட்டையாடிய வழக்கில், நடிகர் சல்மான் கான், குற்றவாளி' என, தீர்ப்பளித்தார். நடிகர் சல்மானுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்களை விடுதலை செய்தார். ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, ஜோத்பூர் சிறையில், சல்மான் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com