விவசாயிகள் போராட்டத்தை சீனாவும், பாகிஸ்தானும் தூண்டி விடுகின்றன.. மத்திய மந்திரி பேச்சு..

விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர், கடந்த 8ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. மீண்டும் டிச.14 முதல் டெல்லி சலோ போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் பத்னாபூரில் நடந்த சுகாதார மையத் தொடக்க விழாவில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் தான்வே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்களைத்தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், இதை புரிந்து கொள்ளாமல் விவசாயிகள் போராடுகின்றனர். இந்த போராட்டத்திற்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளது. ஆனால், அவர்கள் நினைப்பது நடக்காது. இந்த போராட்டத்தால் விவசாயிகளுக்குத்தான் இழப்பு ஏற்படும்.

ஏற்கனவே குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து போராடுவதற்கு முஸ்லிம்கள் தூண்டி விடப்பட்டனர். அதனால் என்ன நடந்தது? அந்த சட்டத்தால் ஒரு முஸ்லிமாவது நாடு கடத்தப்பட்டார்களா? இதை யோசிக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து ரூ.24க்கு கோதுமையும், ரூ.34க்கு அரிசியும் வாங்கி, பொது விநியோகத் திட்டத்தில் ரூ.2, ரூ.3க்கு அளிக்கிறது. இதற்கு மத்திய அரசு ரூ.1.75 கோடி மானியம் அளிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

More News >>