சூப்பர் நடிகரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை ஓட்டு போட முடியாமல் ஏமாற்றம்
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவரால் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கேரளாவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 8ம் தேதி திருவனந்தபுரம் உட்பட 5 மாவட்டங்களில் நடந்தது. 2வது கட்ட தேர்தல் இன்று எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி அளவில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. கேரளாவில் தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல் நிபந்தனைகளின்படி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முக கவசம் அணிந்து வரும் வாக்காளர்களுக்கு மட்டுமே ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது. ஓட்டு போடுவதற்கு முன்பும், ஓட்டு போட்ட பின்னும் வாக்காளர்களுக்கு சேனிடைசர் வழங்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் முதன் முறையாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சுய தனிமையில் இருப்பவர்களுக்கு தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நேற்று பிற்பகல் 3 மணிவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் தபால் ஓட்டு போட்டனர். அதன் பின்னர் கொரோனா பாதிக்கப்படுபவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஓட்டு போடலாம். அவர்கள் பாதுகாப்பு கவச உடை (பிபிஇ கிட்) அணிந்து ஓட்டு போட வாக்குப் பதிவு மையத்திற்கு செல்லலாம்.
இந்நிலையில் மலையாள மெகா ஸ்டார் நடிகர் மம்மூட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் அவரால் இன்று ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் மம்மூட்டி கொச்சி பனம்பிள்ளி நகர் பகுதியில் வசித்து வந்தார். அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தான் கடந்த பல வருடங்களாக இவர் ஓட்டு போட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கொச்சியில் உள்ள கடவந்திரா என்ற பகுதியில் புதிய வீடு கட்டி அங்கு மாறினார். இந்நிலையில் நேற்று தன்னுடைய பெயர் எந்த பூத்தில் இருக்கிறது என தெரிந்து கொள்வதற்காக அப்பகுதியை சேர்ந்த ஒரு அரசியல் கட்சி பிரமுகரிடம் கேட்டார். வாக்காளர் பட்டியலை பரிசோதித்த போது மம்மூட்டியின் பெயர் இல்லை.
இது மம்மூட்டிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் இன்று அவரால் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது. இது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று மம்மூட்டி கூறினார். மம்மூட்டி தற்போது பிரீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பினார். இதன்பிறகு கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மம்மூட்டி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் 275 நாட்களுக்குப் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது 10ம் தேதி (இன்று) நடைபெறவுள்ள தேர்தலில் கண்டிப்பாக ஓட்டு போடுவேன் என்று மம்மூட்டி கூறினார். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவரால் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.