நான் பேசியது தமிழகம் முழுதும் பரவியது? - காவிரி போராட்டம் குறித்து கமல்ஹாசன்
மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்' என, நான் பேசினேன். இது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் விடுத்திருந்த அழைப்பின் பேரின் தமிழகம் முழுவதும் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன.
மேலும், வியாழக்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டம் அமைதியாக முடிந்தது. தமிழகம் முழுவதும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. அசம்பாவித சம்பவங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை.
இந்நிலையில் இது குறித்து சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில், “காவிரிக்காக நடக்கும் போராட்டங்கள், வன்முறையாகக் கூடாது. போராட்டத்தை அடக்க முயற்சித்தால் வன்முறை ஏற்பட வாய்ப்பு உண்டு. வன்முறை ஏற்படாமல் தடுப்பது இரு தரப்பினரின் பொறுப்பு.
திருச்சியில், மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும் என, நான் பேசினேன். இது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கலாம்; இந்த எண்ணம் மற்றவர்களுக்கும் உதித்து இருக்கலாம். தமிழகத்தில், மத்திய அரசிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதே, எங்கள் வேண்டுகோள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.