நடிகைகளிடம் கேட்கக் கூடாத கேள்வி.. காலம் மாறிபோச்சு..
1990கள் வரை கூட திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மூடு மந்திரமாக வைத்திருந்த விஷயம் அவர்களின் வயது என்ன என்பதுதான். நடிகைகள் பொதுவாக பிறந்த நாளை வெளிப்படையாக கொண்டாடுவதில்லை. ஹீரோக்கள் 36 வயது வரையில் பிறந்த நாள் கொண்டாடுவார்கள் அதன் பிறகு பிறந்த நாள் விழாக்களுக்கு நற்பணி விழா என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆண்களிடம் சம்பளம் என்ன என்று கேட்காதே, பெண்களிடம் வயது என்னவென்று கேட்காதே என்று சொல்வார்கள். சினிமாவுலகில் இது சாலப்பொருந்தும் எந்த நடிகையிடம் பேட்டி எடுத்தாலும் அவர்களிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்க அனுமதிப்பார்கள் ஆனால் வயது என்ன என்று மட்டும் கேட்டுவிடக்கூடாது உடனே மூட் அவுட் ஆகிவிடுவார்கள். ஆனால் இந்த விஷயமெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு பிறகு மலையேறி வருகிறது.
சில நடிகைகள் பிறந்த நாள் கொண்டட்டத்தின்போது தங்களது வயதை வெளிப்படையாக சொல்லி கொண்டாடுகின்றனர். வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி அதன்பிறகு வேட்டை. வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் இந்தி படங்களில் நடித்தார். இவருக்கு திருமணம் ஆகி 2வது குழந்தையும் பிறந்து விட்டது. சமீரா ரெட்டிக்கு ஓரிரு நாட்களில் 42 வயதாகிறது. தனது சிறப்பு நாளுக்கு முன்னதாக, 'வாரணம் ஆயிரம்' நடிகை சமூக ஊடகங்களில் அசல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். அவர் கூறும் போது, முன்பெல்லாம் வயதை சொல்வதில் எனக்கு ஒரு அச்சமே இருந்து வந்தது. சினிமா உலகில் இருப்பதால் அப்படியொரு சூழல் எனக்கு இருந்தது. நாம் ஒரு வருடம் வயதாகும்போது, அழுத்தங்களில் சிக்கிக் கொள்வேன்!
என் வயதை ஒரு மறைக்க பல முயற்சிகள் செய்வேன். ஆனால் அதை திருத்த முயற்சிக்கவில்லை. முகத்தில் புள்ளிகள் ,இருக்கக்கூடாது, மேக்கப் அணிந்து பளிச்சென இருக்க வேண்டும் என்ற அழுத்தமெல்லாம் இப்போது இல்லை. இயற்கை அழகு விலை மதிப்பற்றது என்றார். சமீரா மேலும் கூறுகையில், இந்த மாதத்தில் எனக்கு 42 வயதாகிறது. இதை நான் வெளிப்படுத்தியபோது பெண்களிடமிருந்து இனிமையான வரவேற்பை பெற்றேன், வெளிப்படையாக நான் வயதை கூறியது பலருக்கு இருந்த தர்மசங்கடத்தை போக்கி இருக்கிறது. உடல் மற்றும் மனதுடன் சமாதானம் செய்வது வயது மிக முக்கியமானது. அதை வெளிப்படுத்தியது உண்மையில் களிப்பூட்டுகிறது. நம்முடைய மகிழ்ச்சி என்பது வேறுயார்டமும் இல்லை அது நம் கைகளில் தான் உள்ளது என்றார்.