சீனா, பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துங்க.. பாஜகவுக்கு சிவசேனா பதிலடி..

விவசாயிகள் போராட்டத்திற்குச் சீனாவும், பாகிஸ்தானும் காரணம் என்றால், அந்த நாடுகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டுமென்று சிவசேனா கிண்டலடித்துள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர், மீண்டும் டிச.14 முதல் டெல்லி சலோ போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் பத்னாபூரில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் தான்வே பேசும் போது, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்களைத்தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் விவசாயிகள் போராடுகின்றனர். இந்த போராட்டத்திற்குப் பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளது. ஆனால், அவர்கள் நினைப்பது நடக்காது. இந்த போராட்டத்தால் விவசாயிகளுக்குத்தான் இழப்பு ஏற்படும் என்று கூறினார்.

இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் கருத்துக் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், மத்திய அமைச்சருக்கு அது தொடர்பாகத் தகவல் கிடைத்திருந்தால், அதை உடனடியாக பிரதமரிடம் சொல்ல வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் இது பற்றி விவாதிக்க வேண்டும். சீனா மற்றும் பாகிஸ்தான் மீது உடனடியாக சர்ஜிகல் ஸ்டிரைக்(துல்லிய தாக்குதல்) நடத்த வேண்டும் என்று கிண்டலாக கமென்ட் அடித்தார்.

More News >>