சுங்கச் சாவடி ஊழியரை கன்னத்தில் அடித்த ஜெகன் கட்சித் தலைவி..
ஆந்திராவில் சுங்கச் சாவடி ஊழியரை ஜெகன் கட்சி பெண் பிரமுகர் அடித்த காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் வாரியங்களில் ஒன்றின் தலைவர் பதவியில் ரேவதி என்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெண் தலைவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் சைரன் பொருத்திய சுமோ காரில் குண்டூர் மாவட்டத்தில் பயணம் செய்திருக்கிறார். அப்போது மங்களகிரி பகுதியில் ஒரு சுங்கச் சாவடியில் வாகனக் கட்டணம் செலுத்த மறுத்திருக்கிறார். சுங்கச் சாவடி ஊழியர்கள் அங்குத் தடுப்புகளைப் போட்டு அவரது காரை மறித்துள்ளனர்.
இதனால், கோபமான ரேவதி காரை விட்டு இறங்கி வந்து, தடுப்புகளை அகற்றினார். அத்துடன் சுங்கச் சாவடி ஊழியர்களைக் கடுமையாகத் திட்டினார். அப்படியிருந்தும் அவர் தடுப்புகளை எடுக்க விடாமல், ஊழியர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரேவதி, ஒரு ஊழியரைக் கன்னத்தில் பளார் என ஒரு அறை கொடுத்தார். இது அந்த சுங்கச் சாவடி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. தற்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடவே, அது வைரலாக பரவி வருகிறது. மேலும், ரேவதி மீது சுங்கச்சாவடி ஊழியர்கள், மங்களகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.சுங்கச்சாவடியில் கட்டணம் தராமல் ஊழியர்களை அரசியல்வாதிகள் தாக்கும் சம்பவங்கள் பல மாநிலங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளன.