தேர்தல் பிரச்சாரம்: கிளைமாக்ஸில் விஜயகாந்த் வருவார் பிரேமலதா பேட்டி
அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது- விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கிளைமாக்ஸில் வருவார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். திருமணத்தை நடத்தி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது. தற்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் முடிவு செய்யப்படும். தேர்தல் பிரச்சாரத்தில் கிளைமாக்ஸில் விஜயகாந்த் வருவார். என்றவர் ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்குஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சி ஆரம்பிப்பது எளிது ஆனால் அந்த கட்சியைத் தொடர்ந்து நடத்தி வெற்றி காண்பது கடினம் என்றார்.முன்னதாக ஆண்டிபட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த்துக்குத் தொண்டர்கள் அளித்த வரவேற்பு காரணமாக ஆண்டிபட்டி தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.