மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறையைக் கைவிடக்கோரி நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.ஆயுஸ் மருத்துவத்தில் தேர்ச்சி பெறும் டாக்டர்கள் அலோபதி மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளைச் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இது ஆபத்தான நடைமுறை என்றும் இதனால் மருத்துவத் துறைக்கு பெரும் சீர்கேடு ஏற்படும் என்பதால் இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அலோபதி மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் நாளை முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவசர சிகிச்சை மற்றும் கொரானா சிகிச்சைகளைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளப் போவதில்லை என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.