உயிர்காக்கும் நபர்களுக்கான சட்டம் பற்றி தெரியுமா?
இந்தியாவின் மக்கள் தொகையானது, சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோன்று சாலை விபத்துகளில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி நாளொன்றுக்கு இந்தியாவில் 1317 சாலை விபத்துகளும், 413 மரணங்கள் நிகழ்வதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 55 சாலை விபத்துகளும், 17 மரணங்கள் நிகழ்வதாகவும் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த சாலை விபத்துகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழப்பதற்குக் காரணம், அவர்களுக்குத் தகுந்த மருத்துவ உதவிகள், தங்க மணி நேரம் எனப்படும் விபத்திற்குப் பின் உள்ள ஒரு மணி நேரத்தில் கிடைக்காததால் தான் ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் இந்திய அரசானது, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரியும் நபர்களுக்குத் தகுந்த பாதுகாப்பை அளிக்காததால் தான் எனவும் பலர் வெதும்புகின்றனர்.
எனவே இந்த பிரச்சனையைச் சரிசெய்யும் விதமாக இந்திய அரசின் உச்சநீதிமன்றம் 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ம் தேதி "Good Samaritan law" எனும் சட்டத்தை நிறைவேற்றியது. பின்னர் சட்டத்தின் வலிமையால் இந்த சட்டத்தைச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமும் ஏற்றுக்கொண்டது. பின்னர் அடுத்தடுத்த மாதங்களில் மாநில அரசுகளும் இந்த சட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டது. பின்னர் இந்த சட்டம் மோட்டார் வாகன சட்டம் 2019 ல் சேர்க்கப்பட்டு பின்னர் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
* இச்சட்டத்தின் படி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் நபர்களை எக்காரணத்தைக் கொண்டும் போலீஸ் விசாரிக்கக்கூடாது.
* விபத்தில் சிக்கியவர்களுக்குக் கண்டிப்பாக மருத்துவ நிர்வாகம் முதலுதவி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நிராகரிக்கக் கூடாது. மேலும் உதவி புரிந்தவர்களிடம் எவ்விதமான மருத்துவ கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
* இச்சட்டம் உதவி புரிபவர்களை சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்யும்.
* விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரியும் நபர்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் விருப்பப்பட்டால் சாட்சியம் அளிக்கலாம். ஆனால் நிர்ப்பந்திக்கக் கூடாது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை முதலாவது உயிர்காக்கும் சட்ட நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்குச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பான தோழன் அமைப்பு இந்த தினத்தை விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடியது.