வசூல் ரூ.9.6 லட்சம்.. அரசுக்கு ரூ.4.90 லட்சம்.. ஊட்டி ரயிலை விடாது துரத்தும் சர்ச்சை!
கொரோனா ஊரடங்குக்கு பிறகு அக்டோபர் முதல் உதகை குன்னூர் இடையே மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்பி சு.வெங்கடேசன், ``உதகை மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு அதன் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 3000 ரூபாய். மார்ச் முதல் ஜூன், ஜூலையில் சீசன் காலத்தில் போய்வர ஒரு நபருக்கு 12000 வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது" என்று குற்றம் சுமத்தி இருந்தார். மேலும் காவி உடையணிந்து பெண்கள் ஊட்டி ரயிலில் இருப்பது போன்ற காட்சிகளும், ரயிலும் காவி நிறமாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இதனால் இந்த விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ரயில்வே அதிகாரிகள் விளக்கம் கொடுத்தபின்பும் சர்ச்சை ஓயவில்லை. தற்போது ரயில் கட்டணம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, சிறப்பு ரயில் என்ற பெயரில் மலை ரயில் தனியாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அரசு சின்னங்கள் அகற்றப்பட்டு, மேட்டுப்பாளைத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தின் லோகோவை வைத்து ரயிலை இயக்கியுள்ளது. ரயிலில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, விமானத்தில் பணிப்பெண்கள் இருப்பதுபோல ரயிலுக்கும் பணிப்பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். பின்னர்,
110 ரூபாயாக இருந்த பயணக் கட்டணம் 3000 ரூபாயாக அதிகரித்து வசூலித்திருக்கிறது அந்த தனியார் நிறுவனம். இதன்காரணமாக, 9,60,000 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது அந்த தனியார் நிறுவனம். ஆனால் அரசுக்கு வாடகையாக 4,90,000 ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.