குளிர்காலத்தில் தலைக்கு குளிக்கலாமா?
குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. சிலருக்கு உடல் சூடு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் உட்கார்ந்து எழுந்து இடத்தில் சூடாக இருப்பதாக மற்றவர்கள் உணருவார்கள். அப்படிப்பட்ட உடல் கொண்டவர்கள், குளிர்ச்சியான காற்று, மழை, பனி விழும் சமயத்தில் வீட்டுக்கு வெளியே இருந்தால் மூக்கடைப்பு, தும்மல், நீர்கோத்து தலைவலி போன்றவை வரும். இவற்றைப் பீனிச பாதிப்பு என்பர். முன்னால் குனிந்தால் நீர் ஓடுவதுபோல் பாரம் இருந்தால், சைனஸிட்டிஸ் இருக்கக்கூடும். காது சீழ், டான்சிலிடிஸ் போன்ற எல்லாமே உடலின் மேல் பக்க உறுப்புகளைச் சார்ந்த சுவாச பிரச்சனைகள் எனப்படுகின்றன.
இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், தலைக்குக் குளிக்கலாமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. பலர் பயத்தில் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதேயில்லை. கண்டிப்பாகத் தினமும் தலைக்குக் குளிக்கவேண்டும். உடம்பு வலி இருக்கிறது; காய்ச்சல் இருக்கிறது என்றால் மட்டும் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்கலாம்.பல ஆண்டுகள் தலைக்குக் குளித்து பழக்கமில்லையென்றால் உடனடியாக குளிக்கவேண்டாம். சுக்குத்தைலம், நொச்சி தைலம், அரக்கு தைலம் போன்ற சித்த மருத்துவம் சார்ந்த தைலங்களைத் தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
தவிர்க்க வேண்டியவை
நீர்க்காய்கள் என்று கூறப்படும் சுரைக்காய், பூசணி, தடியன் காய், பீர்க்கங்காய் தவிர்க்கலாம். அவற்றைச் சமைத்தால் மிளகு தூள் தூவி சாப்பிட வேண்டும். தும்மல், அடுக்குத் தும்மல், சைனஸிட்டிஸ் போன்றவை இருப்பவர்கள் பாலை தவிர்க்கவும். எலும்பு பிரச்சனைக்காக மருத்துவர்கள் தவிர்க்கக்கூடுவது என்று கூறினால் மட்டும் மருந்தாக எண்ணி பாலை குடிக்கலாம்.பால் சேர்க்காத தேநீருக்கு இரத்த குழாயை வலுப்படுத்தக்கூடிய, புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய தன்னை உள்ளது. தேயிலையின் இந்தக் குணங்களைப் பால் தடுக்கிறது. இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் இனிப்புகளைத் தவிர்க்கவேண்டும்.
குளிர் கால சளி பிரச்சனை தீர வழிகள்
குளிர் காலத்தில் நெஞ்சில் கபம் கட்டும், தும்மல், மூக்கடைப்பு பிரச்சனை உள்ளவர்கள், துளசி, கற்பூரவல்லி, தூதுவளை, வெற்றிலை 2 ஆகியவற்றை எடுத்து 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து கால் தம்ளர் வரும்வரை கொதிக்க வைக்கவும். அந்த நீரைக் காலையும் மாலையும் அருந்தவேண்டும். மிளகை அகன்ற பாத்திரத்தில் வைத்து, இரண்டு நாள் மோர் ஊற்றி வெயில் வைக்கவேண்டும். உலர்ந்த பிறகு இரண்டு நாள் வேலிப் பருத்தி சாறு ஊற்றி, அடுத்த இரண்டு நாள் வெற்றிலை சாறு, பிறகு இரண்டு நாள் கற்பூரவல்லி இலைச் சாறு, பின்னர் இரண்டு நாள் தூதுவளை சாறு இவற்றை ஊற்றி ஒன்று காய்ந்ததும் இன்னொன்றை ஊற்றி இரண்டு இரண்டு நாள்கள் வெயிலில் வைக்கவேண்டும். பிறகு மிளகைப் பொடித்து வைத்துக்கொண்டு, 2 அல்லது 3 சிட்டிகை தேனில் குழைத்துச் சாப்பிடலாம். சிறுவர் சிறுமியருக்கு இப்பிரச்சனை இருந்தால் தினமும் ஆவி பிடிக்கவேண்டும். 2 அல்லது 3 மிளகை பொடி செய்து, தேனை இளஞ்சூடாக்கி நுரைக்க வைத்து மிளகு பொடியைக் கலந்து சாப்பிட்டால் இருமல் மட்டுப்படும்.