நாடாளுமன்ற அடிக்கல் நிகழ்வில் சோழர் கால ஆட்சி குறித்து பேசிய மோடி!

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சர்வமதப் பிரார்த்தனையும் நடைபெற்றது. ரூ.971 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டிடப் பணி வரும் 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. அந்த ஆண்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

அதற்குள் புதிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடத்தைக் கட்டும் பணியை டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. பிரமாண்ட அரசியலமைப்புச் சட்ட அரங்கம், நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கான அறைகள், உறுப்பினர்கள் ஓய்வு அறை, நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் இந்த கட்டிடத்தில் இடம்பெற உள்ளது.

இதற்கிடையே, அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவில் ஜனநாயக நடைமுறைகள் பழங்காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளன. அதற்கு சோழர் கால ஆட்சியே சிறந்த சான்று. சோழர் காலத்தில் தேர்தல் நடைமுறை இருந்தது. மக்களே தகுதியானவர்களை தங்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தனர். அதேபோல் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமையும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது" என்று பேசினார். மேலும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் குறித்தும் மோடி பேசினார்.

More News >>