குளிர் காலத்தில் புறக்கணிக்க கூடாதவை எவை தெரியுமா?

குளிர்காலம் வந்தாலே சோம்பல் பிடித்துக்கொள்ளும். பகல் பொழுது குறைவாகவும் இரவு நீளமாகவும் இருப்பதுபோல் தோன்றும். இது தவிரப் பருவநிலை மாற்றம் காரணமாக உடலில் சில தொந்தரவுகள் ஏற்படக்கூடும். குளிரைச் சபிப்பதற்குப் பதிலாக, அதைச் சரியானபடி எதிர்கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். இரவில் வெகுநேரம் வேலை செய்துவிட்டு, காலை குளிரில் எழும்ப மனமில்லாமல் தாமதமாக எழும்புவதால் சீரான செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும். நம் உடல் பகல், இரவுக்கேற்ப செயல்படக்கூடியது. சிர்காடியன் கிளாக் எனப்படும் உடலின் நேரம் அறியும் தன்மை இதனால் தாக்கமுறும். ஆகவே, சரியான நேரத்தில் படுத்துச் சரியான நேரத்தை எழுவதைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது நலம்.

தண்ணீர்

குளிர்காலத்தில் தண்ணீர் அருந்துவது குறைந்துபோகும். அதுவே சில பாதிப்புகளுக்குக் காரணமாகி விடக்கூடும். ஒருநாளைக்கு ஆணுக்கு 3.7 லிட்டர் நீரும், பெண்ணுக்கு 2.7 லிட்டர் நீரும் தேவை என்று கூறுகிறார்கள். இதற்குக் குறைவாக நீர் அருந்தும்போது அதிக பசி, உடலில் நச்சு சேர்தல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, வெறும் தண்ணீரை அருந்துவது சிரமம் என்றால் புதினா நீர், துளசி நீர் அருந்தலாம். பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும். கிரீன் டீ, சூரியகாந்தி டீ, மூலிகை டீ, எலுமிச்சை நீர், உப்பு, சீரகம் கலந்த நீர், நீர்த்த காய்கறி சூப் மற்றும் தேங்காய் தண்ணீர் என்று ஏதாவது ஒருவிதத்தில் நீர் உடலில் சேரும்படி அருந்துவது நல்லது.

வைட்டமின் சி

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு சருமத்தில் வறட்சி ஆகும். சருமம் வறட்சியாவதைத் தவிர்க்கத் தண்ணீர் அதிகம் அருந்தவேண்டும். வால்நட், பப்பாளி பழம், காலிஃபிளவர், பிரெக்கொலி போன்றவை சாப்பிடவேண்டும். வைட்டமின் சி சத்து அடங்கிய எதையும் அதிகம் சாப்பிடுவது சருமத்தை பாதிப்படையாமல் காக்கும்.

புரதம்

குளிர்காலத்தில் புரதம் என்னும் புரோட்டீன் அதிகம் அடங்கிய உணவுகளைச் சாப்பிடவேண்டும். முழு தானியங்கள், நெய், தேங்காயெண்ணெய், முளைக்கட்டிய தானியம் போன்றவற்றைத் தவிர்க்காமல் சாப்பிடுவது பலன் தரும்.

More News >>