அபுதாபியில் இளம் பெண் கூட்டு பலாத்காரம் சமூக வலைத்தளங்களில் வீடியோவை பகிர்ந்த கும்பல் கைது

அபுதாபியில் இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே கும்பலை அபுதாபி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.பொதுவாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் குற்றங்கள் நடப்பது மிகவும் குறைவாகும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் கடுமையான தண்டனை உடனடியாக கிடைக்கும் என்பது தான் இதற்குக் காரணமாகும்.

இந்நிலையில் அபுதாபியில் ஒரு இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம் பெண்ணை 6 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அபுதாபியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இந்த வீடியோ அபுதாபி போலீசுக்குக் கிடைத்த உடன், விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய அமீரக அட்டர்னி ஜெனரல் உத்தரவிட்டார். அபுதாபி போலீசாரின் தீவிர விசாரணையில் சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரத்திலேயே 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த தகவலை அமீரக அட்டர்னி ஜெனரல் டாக்டர் ஹமத் செய்ப் அல் ஷம்சி வெளியிட்டார். இவரது தலைமையிலான தனிப்படை தான் விசாரணை நடத்தி குற்றவாளிகளை அதிரடியாகக் கைது செய்தது. இதுகுறித்து அல் ஷம்சி கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் அமீரகத்தில் ஒருபோதும் நடக்கக் கூடாதது ஆகும். இது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். அதனால் தான் நானே நேரடியாக விசாரணையில் ஈடுபட்டேன். குற்றம் செய்தவர்களுக்கு உரிய கடும் தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும்.

இதுபோன்ற சம்பவங்கள் அமீரகத்தில் நடப்பது மிக மிக அபூர்வமானதாகும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நம் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>