டெல்லியில் 16வது நாளாக விவசாயிகள் போராட்டம்,. ரயில் மறியலில் ஈடுபட திட்டம்..
டெல்லியைச் சுற்றி எல்லைகளில் விவசாயிகள் சாலைகளை ஆக்கிரமித்து 16வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் ரயில் மறியல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 15வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி-ஹரியானா பாதைகளில் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் வாகனங்களுடன் முகாமிட்டுள்ளனர். இதனால், டெல்லியில் இருந்து ஹரியானா செல்லும் சாலைகள் முடங்கியுள்ளன.விவசாயிகளின் அழைப்பின் பேரில் கடந்த 8ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றன.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அளித்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது. இதைத் தொடர்ந்து, டிச.14ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்று கூட்டு நடவடிக்கைக் குழுவினர் முடிவு செய்தனர். டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-ஆக்ரா சாலைகளையும் முடக்கி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில், சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விளையாட்டு வீரர்கள், திரையுலகினர் உள்பட பல்வேறு பிரபலங்களும் உதவி வருகின்றனர். உணவு, கம்பளி உள்பட அனைத்து வசதிகளும் அவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், லாண்டரி வசதி கூட அப்பகுதியில் செய்து கொடுத்திருக்கிறார்கள். பொது மக்களே பல்வேறு வகையில் உதவி வருகிறார்கள். அந்த பகுதியில் இலவச வைபை வசதி கூட கிடைக்கிறது.
இன்று 16வது நாளாக சிங்கு, திக்ரி பகுதிகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், அடுத்த கட்டமாக ரயில் மறியலில் ஈடுபட்டு, ரயில் போக்குவரத்தைத் தடை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய வேளாண் அமைச்சர் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.