குஜராத்தில் ரூ.88 லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு..
குஜராத்தின் வதேதரா பகுதியில் ரூ.88 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றி, தரையில் கொட்டி அழித்தனர்.காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு பான்மசாலா கடைகள்தான் ஏராளமாக இருக்கும். அவற்றில் போதை அளிக்கும் சில பான்மசாலாக்களும் விற்கப்படுவதுண்டு. இது தவிர, மகாராஷ்டிரா உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து திருட்டுத்தனமாக விற்கின்றனர்.
இந்நிலையில், வதேதரா நகரில் ரூ.88 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து வதேதரா போலீஸ் துணை கமிஷனர் கரன் ராஜ் கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்து கடத்திக் கொண்டு வந்து வதேதரா பகுதியில் மதுபாட்டில்களை விற்பவர்களைக் கைது செய்து அவற்றைக் கைப்பற்றி வருகிறோம். கடந்தாண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை சுமார் 33 ஆயிரம் மதுபாட்டில்களை கைப்பற்றி அழித்துள்ளோம். தற்போது ரூ.88 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கைப்பற்றி அழித்துள்ளோம். திருட்டுத்தனமாக மது விற்பவர்களைக் கைது செய்து வருகிறோம் என்றார்.