அடுத்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது மத்திய கல்வி துறை அமைச்சர் தகவல்
அடுத்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும், ஜெஇஇ மெயின் தேர்வு 4 முறையாக நடத்தப்படும் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார்.கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் மிகவும் தாமதமாகவே நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இதுவரை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் குறித்துப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியது: அடுத்த ஆண்டு (2021) நடைபெற வேண்டிய நீட்தேர்வு எந்தக் காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் ஜெஇஇ மெயின் தேர்வு 4 முறையாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி கடைசி வாரத்தில் தொடங்கி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த 4 தேர்வுகளில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அந்த மதிப்பெண் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகிய துறையினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி தீர்மானிக்கப்படும். 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்சி, போர்டு தேர்வுகளை நடத்துவது குறித்துச் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். செய்முறைத் தேர்வு உட்பட போர்டு தேர்வு தேதி குறித்து சிபிஎஸ்இ இன்னும் முடிவெடுக்கவில்லை. தேர்வுக்கு முன்பாக செய்முறைத் தேர்வு நடத்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். சிபிஎஸ்இ 12ம் வகுப்பில் சில பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் சிபிஎஸ்இ அதனுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டாலோ, கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டாலோ சிபிஎஸ்இ யின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்திட்டத்தின் வீடியோவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.