குங்குமத்தை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை
கணவன் வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த 26 வயது இளம்பெண், குங்குமத்தை அளவுக்கதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்தது.உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள படோஹி என்ற இடத்தை சேர்ந்தவர் விகாஸ் பிந்த். இவரது மனைவி சரஸ்வதி தேவி (வயது 26). இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. விகாஸ் பிந்த், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
பல மாதங்களுக்கு ஒரு முறை தான் இவர் மனைவி மற்றும் குழந்தையைப் பார்ப்பதற்காக ஊருக்குச் செல்வது வழக்கம். தன்னையும், குழந்தையையும் சூரத்திற்கு கொண்டு செல்லுமாறு சரஸ்வதி தேவி பல முறை கணவனிடம் கூறி வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும், அடுத்த முறை பார்க்கலாம் என்று அவர் மனைவியிடம் கூறி வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விகாஸ் பிந்த் ஊருக்கு வந்திருந்தார்.அப்போதும் சரஸ்வதி தேவி தன்னையும், குழந்தையையும் சூரத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் விகாஸ் பிந்த் சூரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த சரஸ்வதி தேவி வீட்டில் இருந்த குங்குமத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சரஸ்வதி தேவி பரிதாபமாக இறந்தார். குங்குமத்தில் இருந்த ஈயம் மற்றும் பாதரச கலவை அதிக அளவில் உடலுக்குள் சென்றது தான் மரணத்திற்குக் காரணம் என்று டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து படோஹி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.