கொச்சியில் 6வது மாடியிலிருந்து சேலம் பெண் கீழே குதித்த சம்பவம் வீட்டு உரிமையாளர் மீது வழக்கு
கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து சேலத்தை சேர்ந்த பெண் கீழே குதித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் இம்தியாஸ் அகமது. இவர் கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6வது மாடியில் உள்ள பிளாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் சேலத்தை சேர்ந்த குமாரி (55) என்ற பெண் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த பிளாட்டில் சமையலறையில் தங்கியிருந்தார். தினமும் காலை 6 மணிக்கு இவர் பணிகளைத் தொடங்கி விடுவார்.
ஆனால் சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் அவர் தங்கியிருந்த சமையலறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் இம்தியாசின் மனைவி சென்று பார்த்த போது அறையில் குமாரியை காணவில்லை. பின்னர் அவரைத் தேடி பார்த்தபோது அடுக்குமாடி குடியிருப்பில் வாகனங்களை நிறுத்தும் பகுதியில் உள்ள கூரையின் மீது ரத்தவெள்ளத்தில் குமாரி கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொச்சி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரால் கூரையின் மீது ஏறி குமாரியை மீட்க முடியாததால் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் கூரையின் மீது ஏறி குமாரியை மீட்டு கொச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சம்பவம் குறித்து போலீசால் இதுவரை அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் குமாரி 6வது மாடியில் இருந்து சேலையை கயிறு போல கட்டி கீழே இறங்க முயற்சித்தது தெரியவந்தது. அவர் எதற்காக அவ்வாறு செய்தார் என இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் நேற்று வரை வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர். குமாரி மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் முதலில் கூறிவந்தனர். வீட்டு உரிமையாளரான இம்தியாசை காப்பாற்றுவதற்காகவே போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என புகார் எழுந்தது.
இதற்கிடையே போலீசார் குமாரியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குமாரியின் கணவர் கொச்சிக்கு விரைந்து சென்றார். அவர் அளித்த புகாரின் பேரில் தற்போது இம்தியாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன் மனைவியை இம்தியாசின் குடும்பத்தினர் சிறை வைத்திருந்ததாக அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இம்தியாஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். நடந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று போலீசாரிடம் அவர் கூறிவருகிறார். மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் குமாரிக்கு சுயநினைவு திரும்பிய பின்னரே சம்பவம் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என்று போலீசார் கூறுகின்றனர்.