பாஜக தலைவர் வாகனம் மீது கொல்கத்தாவில் தாக்குதல் பழிக்குப் பழி வாங்குவோம் பாஜக தலைவர் எச்சரிக்கை

கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற பாஜக இப்போதே தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமித்ஷா கடந்த சில மாதங்களில் மட்டும் பல முறை மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று வந்துவிட்டார்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் பாஜக தலைவர்கள் நேற்று முன்தினம் கொல்கத்தா சென்றனர். தேர்தல் பிரசார பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இவர்கள் சென்றனர். கொல்கத்தாவில் இவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நட்டாவின் கார் மீது ஒரு கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் அவரது கார் சேதமடைந்தது. நட்டாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாகி விட்டது. இது தொடர்பாக ஏற்கனவே நான் முதல்வர் மம்தாவுக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தேன். மேலும் இதுகுறித்து மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளேன் என்று கூறினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தன்னுடைய பேஸ்புக்கில் கூறியிருப்பது: கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் வாகனத்தின் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தான் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு நாங்கள் பழிவாங்காமல் விட மாட்டோம். விரைவில் வட்டியுடன் திருப்பிக் கொடுப்போம்.

டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அபிஷேக் பானர்ஜியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது இதற்கு ஒரு உதாரணம் ஆகும். அது ஒரு தொடக்கம் மட்டும் தான். நீங்கள் ஒருவரை கொன்றால் நாங்கள் நான்கு பேரை கொல்வோம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மேற்கு வங்க மாநிலத்தில் மிக மோசமான, அராஜகமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், பாஜக தலைவரின் வாகனத்தின் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தவில்லை. பொதுமக்கள் தான் பாஜக மீது ஆத்திரம் கொண்டு இதில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

More News >>