முழு உடல் தகுதி பெற்றார் ரோகித் சர்மா..
உடற்தகுதி தேர்வில் 'பாஸ்' ஆனதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என தெரிகிறது.இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தலா 3 ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி 20 போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ம் தேதி அடிலெய்ட் ஓவலில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 26ம் தேதி மெல்பர்னிலும், 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ம் தேதி சிட்னியிலும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதி பிரிஸ்பேனிலும் தொடங்குகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி செல்வதற்கு முன் ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா எந்த அணியிலும் இடம் பெறவில்லை. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்குக் காயம் ஏற்பட்டதால் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து டெஸ்ட் அணியில் மட்டும் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் காயம் குணமாகாததால் டெஸ்ட் அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.இந்நிலையில் மும்பையில் ரோகித் சர்மாவுக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. முன்னாள் இந்திய வீரர் ராகுல் திராவிட் தலைமையில் இந்த தேர்வு நடைபெற்றது.
இதில் ரோகித் சர்மா முழு உடல் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. வரும் 14ம் தேதி ரோகித் சர்மா ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்கிறார். அங்கு சென்ற பின்னர் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும். அதன் பிறகே போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்பதால் ஜனவரி 7ம் தேதி தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இந்தியா திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.